தமிழ் நாட்டில் காளை வளர்க்கும் மக்கள்
தமிழ் நாட்டில் காளை வளர்க்கும் மக்கள், தங்களின் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில்
திறந்த வெளியில் காளையை அடக்குவது ஏறு தழுவுதல், சல்லிக்கட்டு,
மஞ்சுவிரட்டு எனப் பல பெயர்களில் வழங்கப்படுகின்றது. குறிஞ்சி,
முல்லை, மருதம், நெய்தல்,
பாலை என ஐந்து நிலங்களில் மேய்ச்சல் நிலம் (முல்லை) கால்நடை
வளர்ப்புக்கு பெயர் பெற்றது. இந்தப் புகழ்பெற்ற விளையாட்டின் தொடர்ச்சியைத் தொல்
பழங்கால ஓவியங்கள், புதிய கற்கால பாறைச் செதுக்குகள்,
சிந்து வெளி நாகரிக முத்திரைகள், நடுகற்கள்
ஆகியவற்றில் காணலாம்.
கால்நடை வளர்க்கும்
சமூகத்தில் கால்நடைகள் செல்வமாகக் கருதப்படுகின்றன. நடுகற்களில் பொன் என்ற சொல்
கால்நடைகளுக்கு இணையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கால்நடைகள் தமிழ்நாட்டின்
பண்பாட்டு அடையாளக் குறியீடாக கருதப்படுகின்றன.
சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில்
கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங்கம்பினால் வளையம் செய்து காளையின்
கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில்
இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் இந்திய
நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது.
மாட்டை அணையும் வீர்ருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம்
பிற்காலத்தில் ‘சல்லிக் கட்டு’ என்று
மாறியது. பேச்சு வழக்கில் அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு’
ஆனது என்றும் கூறப்படுகிறது.
மதுரை மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றி ஜல்லிக்கட்டு
நடைபெறும் இடங்கள்
மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம்,
பேரையூர் போன்ற இடங்களிலும் சிவகங்கை மாவட்டத்தில் சீராவயல்,
சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை
போன்ற இடங்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை போன்ற
இடங்களிலும் சல்லிக்கட்டு நடைபெறுகிறது. மேலும் திண்டுக்கல், திருச்சி, தேனி போன்ற தென் மாவட்டங்களிலும்
இவ்விளையாட்டு நிகழ்கின்றது.
மற்ற மாநிலங்கள், நாடுகளில் நடைபெறும் மாட்டு வண்டி ஓட்டங்களின் பெயர்கள்
மரமாடி |
பாரம்பரிய மாடு ஓட்டம், கேரளா |
கம்பாலா |
எருமைப் பந்தயம், கர்நாடகா |
சிக்கல் குட்டா |
மாட்டுப் பந்தயத் திருவிழா, மகாராஷ்டிரா |
மொய்ச்சாரா |
ஹெரோபங்கா கிராமத்தில் நடைபெறும் கால்நடைப் பந்தயத் திருவிழா, மேற்கு வங்கம் |
கெராபன் சபி புருஜீல் |
இந்தோனேசியாவின் ப்ரோபோலிங் கோவில் நடைபெறும் பாரம்பரிய மாட்டுப்பந்தயம் |
மாட்டுவண்டிப்பந்தயம் |
பதினெட்டாங்குடி, மதுரை |
மாட்டுவண்டிப்பந்தயம் |
அனந்தம்பூர், ஆந்திரப்பிரதேசம் |
மாட்டுவண்டிப்பந்தயம் |
பஞ்சாப், பாகிஸ்தான் |
மாட்டுவண்டிப்பந்தயம் |
இலங்கை |